நாட்டில் தற்போது வரையில் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள 4 இலட்சம் கிலோகிராம் பால்மாவை விடுவித்து, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் கோரியுள்ளது.
குறித்த பால்மா தொகை நுகர்வுக்கு பொறுத்தமற்றதாக மாறியுள்ளதென இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ள கருத்தை நிராகரிப்பதாக சுங்கத்திணைக்களம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அத்துடன் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவருக்கு சொந்தமான 6 கொள்கலன்கள் மேலதிக விசாரணைகளுக்காக கடந்த 14ஆம் திகதி தடுத்து வைக்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் வீரசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடன் எல்லைகள் பால்மா இறக்குமதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதற்கமையவே பால்மா தொகை இறக்குமதி செய்யப்படுகிறது.
6 மாதங்களுக்கு முன்னரே தேவைக்கு ஏற்ப பால்மாவுக்கு முன்பதிவு செய்யப்படும். கடன் அடிப்படையில் பால்மா இறக்குமதி செய்யப்படுவதோடு அவற்றுக்கான கட்டணங்களை 90 முதல் 120 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 6 கொள்கலன்களுக்கும் பெப்ரவரி 23 ஆம் திகதிக்குள் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில், மக்களுக்கு பால்மாவை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படக் கூடும்.
மேலும் குறித்த பால்மா தொகை வீணடையாத வகையில் அவற்றை களஞ்சியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.