நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் , விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இன்று தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67 ஆவது பிறந்த தினம் ஆகும். இந்நிலையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிறந்த நாள் வாழ்த்தை கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், போர் காலத்தின்போது கிபிர் விமானங்கள் வந்தால், தமிழ் மக்கள் எந்தளவு பயந்தார்களோ, அதேபோன்று இன்று மஹாவலி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோதும் தமிழ் மக்கள் அச்சப்படுகிறார்கள். ஏனெனில் மஹாவலி அதிகார சபையின் திட்டங்கள், தமிழ் மக்களுக்கு எதிரான திட்டங்களாகவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மஹாவலி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகள் நிறுத்தப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இரசாயன உற்பத்தி பொருட்களாகவே இருப்பதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் தனிப்பட்டவர்களுக்கு இலாபம் தரும் திட்டங்களாகவே அவை அமைந்துள்ளதாகவும் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
மேலும் அரசாங்கத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்ற போதும் அவர்களால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.