இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் அகதிகளாக வேறு நாட்டில் குடியமர்த்துங்கள் என்று வியட்நாமில் மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மியான்மரில் இருந்து தஞ்சம் கோரி 303 இலங்கை தமிழர்கள் படகில் கனடாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, நடுக்கடலில் விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து, வியட்நாம் கடலோர காவல்படை, படகுகளில் விரைந்து வந்தது. 303 பேரையும் மீ்ட்டு, வியட்நாமில் உள்ள வுங் டாவ் துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. அங்கு அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 303 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இப்பிரச்சினையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது.
ஆனால், 303 இலங்கை தமிழர்களும் தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று அகதிகளுக்கான ஐ.நா. ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏதேனும் ஒரு மூன்றாவது நாட்டில் தங்களை அகதிகளாக குடியமர்த்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.