பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அமைய அமைக்கப்பட்ட தேசிய பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (ஒக். 06) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
“தேசிய பேரவையின்” முதலாவத கூட்டத்தில் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட இரு உபகுழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதற்கான உபகுழுவுக்கு தேசிய பேரவையின் உறுப்பினர்களான பவித்திரா வன்னியாராச்சி, சாகர காரியவசம், வஜிர அபேவர்தன, அசங்க நவரத்ன, மனோ கணேசன், ரோஹித அபேகுணவர்தன, அலி சப்ரி ரஹீம், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், நசீர் அஹமட், நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாந்து, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறுகிய மற்றும் மத்திய கால பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக உபகுழுவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தன், வஜிர அபேவர்தன, அசங்க நவரத்ன, ரிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், பாட்டலி சம்பிக ரணவக்க, சிசிர ஜயகொடி, எம்.ரமேஷ்வரன், மனோ கணேசன், டிரான் அலஸ், நசீர் அஹமட், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இரு உபகுழுக்களையும் இன்று (07) கூட்டுவதற்கு இன்றை தேசிய பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சபாநாயகரைத் தவிசாளராகக் கொண்ட தேசிய பேரவை, பிரதமர், பாராளுமன்ற சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சி முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களையும் கொண்டதாகும்.