தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு போதுமான அளவு அட்டைகள் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் 1500க்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.
போதிய அட்டைகள் இன்மையால் சேவைகளை பெற்றுக் கொள்ள செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள செய்திகள் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இன்னும் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும் பிரதேச செயலாளர்களின் மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி முதன்முறையாக அடையாள அட்டை கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலில் புதிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தற்போது உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அனைத்து குடிமக்களுக்கும் ஒரு வருடத்திற்குள் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.