தற்போதைய இந்த அரசாங்கத்தின் காலத்திலே இவ்வாறான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான குற்றச்செயல்கள் இந்த நாட்டில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பல அறிக்கைகளும் ஆவணங்களும் அவ்வாறே தெரிவிக்கின்றன. இந் நிலையில் இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் வேகம் போதவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.சிறுவர் மற்றும், பெண்கள் துஷ்பிரயோகங்களைக் கண்டித்து முல்லைத்தீவு – மாவட்டசெயலகம் முன்பாக 22.07.2021இன்று இடம்பெற்ற, கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிறுவர்கள் மற்றும், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்கொடுமைகள் என்பவற்றைக்கண்டித்து, இத்தகைய செயற்பாடுகளுக்கு முறையான நீதி நியாயங்களை இந்த அரசு வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளோம்.
இலங்கையில் சுற்றுலா மற்றும், பயணத்துறையில் சிறுவர் பாலியல் முறைகேடுகள் அதிகரித்திருப்பதாக ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு 2019ஆம் ஆண்டு தெரிவித்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு வலிந்துதவும் அமைப்பு 18.11.2019 இல் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சகிக்காமல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பத்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர்.
அதேவேளை கடந்த 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 15நாட்களில், மட்டக்களப்பில் 44 பாலியல் வன்கொடுமைகள், 08 கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்கள், 17 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் ஜோன்சன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலே மிக அதிகமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றதெனில், இதற்கு யார் பொறுப்பு? இவ்வாறு இடம்பெறும் சம்பவங்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கக்கூடிய விதத்திலே நிர்வாகக்கட்டமைப்பை இந்த அரசு பேணவேண்டும். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும் வழங்கப்படவேண்டும்.
இந்தநிலையிலே இவ்வாறான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளின் வேகம் போதாமலிருக்கின்றது. இவ்வாறான குற்றச் செயல்களுக்குரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் – என்றார்.