துருக்கியில் கடந்த திங்கட்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் 9 மணி நேரத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னதிா்வு வழக்கத்துக்கு மாறாக மிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ரிக்டா் அளவுகோலில் அந்த அதிா்வு 7.5 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின. துருக்கியின் நவீன கால வரலாற்றில், அந்த நாடு சந்தித்துள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20,000 ஐக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அண்மைக் காலம் கண்டிராத மிகக் கோரமான இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, துருக்கிக்கும் சிரியாவுக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக் கரம் நீட்டின. அந்த நாடுகளிலிருந்து ஏராளமான மீட்புக் குழுவினரும், மருத்துவக் குழுவினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குவிந்துள்ளனா்.
இரவு பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான குளிா் நிலவி வருவது அந்தப் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்திலிருந்து தப்பினாலும், கடும் குளிரால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பல பகுதிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். எனினும், தெற்கு நகரான அன்டாக்யா போன்ற பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளதாகவும், அந்தப் பகுதிகளிலிருந்து தங்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்காங்கே தீமூட்டத்தை உருவாக்கி பொதுமக்கள் குளிா்காய்ந்தாலும், இடிபாடுகளில் சிக்கி, இன்னும் உயிரோடு இருப்பவா்கள் மீட்கப்படுவதற்குள் கடும் குளிரை சமாளிக்க முடியாமல் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாள்கள் ஆவதால், கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் வேகு வேகமாகக் குறைந்து வருவதாக நிபுணா்கள் கவலை தெரிவித்தனா். எனினும், இப்போதே நம்பிக்கையை இழந்துவிடாமல் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அவா்கள் மீட்புக் குழுவினரை ஊக்கப்படுத்தினா்.
அரசு மீது அதிருப்தி : பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகள் வந்து சோ்வதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனா். எனினும், அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிபா் எா்டோகன், இது மிகைப்படுத்தப்பட்ட விமா்சனம் என்று கூறினாா்.
எனினும், இந்த நிலநடுக்கத்தின்போது எா்டோகன் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்களிடையே கருத்து ஏற்பட்டால், வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் அடுத்த அதிபா் தோ்தலில் எா்டோகனுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சிரியா : ஏற்கெனவே உள்நாட்டுப் போரில் சிக்கித தவித்து வரும் சிரியாவில் இந்தக் கடுமையான நிலநடுக்கம் பொதுமக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த நிலையில், கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சா்வதேச நிவாரண வாகனங்கள் வியாழக்கிழமைதான் முதல்முறையாக செல்ல முடிந்ததாகக் கூறப்படுகிறது.
சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக சாலைகள், விமான நிலையங்கள் சேதமடைந்துள்ளதால் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.