நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு சுமார் 10.45 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த சந்தேகநபர், கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை பலவந்தமாக திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரமாக முயற்சித்துள்ளார்
எனினும், பூட்டை திறக்க முடியாத நிலையில், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் பூட்டைத் திறக்க போராடிய காட்சிகள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கெமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கண்காணிப்பு கெமெரா பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை விரைவில் அடையாளம் காண முடியும் என தெரிவித்துள்ள பொலிஸார் , பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.

