முல்லைத்தீவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு, முள்ளியவளை – மாமூலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 வயதுடைய திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விபத்தில் 17 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.