திருகோணமலை – நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்றிரவு (03-05-2024) ஹொரவபொத்தான பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் மொரவெவ பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது குறித்த வீதியால் வந்த மாட்டுடன் மோதியதில் ஒரு இளைஞரின் இரு கைகளும் உடைந்துள்ளதுடன் மற்றைய இளைஞரும் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்வாறு படுகாயமடைந்த இளைஞர்கள் மஹதிவுல்வெவ பகுதியை சேர்ந்த 30 மற்றும் 35 வயது உடையவர்கள் எனவும் தெரிய வருகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், மொரவெவ பிரதேசத்தில் வீதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் நிற்பதினால் தொடர்ந்து இவ்வாறான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதேச சபையினர் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.