தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று (18) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
அனைத்து நிர்வாக மற்றும் கணக்கியல் அலுவலகங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு மேலதிக நேர ஊதியம் மற்றும் கட்டாய கைரேகை வருகை கண்காணிப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நேற்று (17) மாலை 4:00 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்கியது.
மத்திய தபால் பரிமாற்றகத்தில் தொடங்கி, நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் விரிவடைந்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக இன்று (18) அனைத்து தபால் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இதற்கிடையில், பல கோரிக்கைகள் தீர்க்கப்பட்ட போதிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என்று தபால் மா அதிபர் ருவான் சத்குமார நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதேநேரம், சேவைக்கு ஏதேனும் இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகள் நடந்தால், ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

