அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பெண் ஒருவரை வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது.
இதனை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் அவர் கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் தொழில்ரீதியாக பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அவருக்கு தடை விதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர் சட்டமா அதிபர் தமது பரிந்துரைகள் அடங்கிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குணதிலக்க தொடர்பில் அவுஸ்திரேலிய சட்ட அமைப்பு என்ன நடவடிக்கை எடுத்தாலும் இலங்கையின் சட்டத்தின்படி அவருக்கு எதிராக காவல்துறையினர் தனியாக நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டமா அதிபர் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.