பேருவளை – மக்கொன பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில், குறித்த நபரின் மகனை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கொன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கொன பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் , மக்கொன பகுதியில் உயிரிழந்த நபர் தச்சு வேலை நிலையமொன்றை நடாத்தி வந்துள்ளதுடன் , அதில் அவரது மகனும் தொழில் புரிந்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் , இதன்போதே மகன் இரும்பு பொல்லால் தந்தையை தாக்கியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய சந்தேக நபரான மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் , பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.