6 வயது சிறுவனை மிளகாய்த்தூள் கொடுத்து சித்திரவதை செய்து வைத்தியசாலையில் அனுமதித்த சிறுவனின் தந்தையை சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன், குடாகம, சமகி மாவத்தையைச் சேர்ந்த சந்தேக நபர், ஹட்டன் டிக்கோயா நகரசபையில் சுகாதாரப் பணியாளராக கடமையாற்றி வந்தார்.
சந்தேகநபர் கடந்த 2ம் திகதி தனது இரு குழந்தைகளையும் விறகு கொண்டு வருமாறு கூறி கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த பகுதி மக்கள் குழந்தைகளை மீட்டு ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சந்தேக நபர் கடந்த 2ம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவியைத் தாக்கியமை மற்றும் குழந்தைகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியமை தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் சந்தேகநபர் பல தடவைகள் எச்சரிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.