பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது நாட்டின் நலன்சார் விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் அண்மைக் கால செயற்பாடுகள் இதனை காட்டுகின்றன.
இதற்கிடையில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான இந்தியாவின் கரிசனை இந்த மாத இறுதியில் வெளிச்சத்துக்கு வருகிறது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவின் கரிசனை இலங்கையினால் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் கூறப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி, பிம்ஸ்டாக் என்ற பல்துறை, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியன்று பலாலி விமான நிலையத்துக்கு அவர்கள் வரவுள்ளனர்
அவர்களை வரவேற்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்
இதேவேளை மார்ச் 18ஆம் திகதி முதல் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
இந்தநிலையில் ஆசியாவின் மிக வெற்றிகரமான அரசியல் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நரேந்திர மோடி, தொடர்ந்து இரண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று தனது எட்டாவது ஆண்டில் ஆட்சி செய்கிறார்.
ஐந்து முக்கிய மாநிலங்களுக்கான அண்மைய தேர்தலில், மோடியின் பாரதிய ஜனதா கட்சி, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் பாரதீய ஜனதாக்கட்சி அரசாங்கம் இலங்கையின் 2.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக வைத்துள்ளது.
கடந்த பல வருடங்களாக இந்தியாவின் பணவீக்க விகிதம் 6% ஆக சீராக உள்ளது,
எனினும் இலங்கையில் மார்ச் 10 ஆம் திகதி, எரிபொருள் விலையுயர்த்தப்படுவதற்கு முன்னர் பணவீக்கம் 16.9% ஆக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.