டீசலை தொகை ஏற்றிய இரண்டு கப்பல்கள் மற்றும் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எரி எண்ணெயை ஏற்றிய ஒரு கப்பல் என்பது நேற்று மாலை இலங்கைக்கு வரவிருந்ததாகவும் அவற்றுக்கு செலுத்த டொலர்களை தேடிக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
38 ஆயிரத்து 400 மெற்றி தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலில் இருந்து அதனை இறக்குவதற்காக 33 மில்லியன் டொலர் வங்கி கடன் பத்திரத்தை வெளியிட வேண்டும் என எரி சக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா கூறியுள்ளார்.
இதனிடையே மூன்று தினங்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பலுக்கு டொலர்களை செலுத்தியுள்ள போதிலும் அதில் உள்ள பெட்ரோலை இறக்க முடியாதிருப்பதாக பெட்ரோலிய தொகை களஞ்சியத்தின் பொது முகாமையாளர் சமீந்திர அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகத்தின் எரிபொருளை இறக்கும் இரண்டு முனையங்களில் தற்போது இரண்டு கப்பல்களில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் இறக்கப்பட்டு வருகிறது.
மற்றைய பெட்ரோல் கப்பலுக்கு பணத்தைம செலுத்தியுள்ள போதிலும் அதில் இருக்கும் பெட்ரோலை இறக்குமதி செய்ய சில நாட்கள் செல்லும் எனவும் அபேசேகர கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் நாடு முழுவதும் கடந்த நான்கு தினங்களாக டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பல எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் “டீசல் இல்லை” என்ற அறிவிப்பு பலகையை காட்சிப்படுத்தியுள்ளன. பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எதிரில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை காணக் கூடியதாக உள்ளது.