இலங்கையில் கடற்கரையோரங்களில் வாழும் உயிரினங்களை பிடித்து இரகசியமாக ஜேர்மனிக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இரண்டு ஜேர்மனியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த கைது நடவடிக்கை இன்று ஞாயிற்றுகிழமை (27-03-2022) இடம்பெற்றுள்ளது.
குறித்த ஜேர்மனியர்களை தெனியாய விஹாரஹேன குருலுகல பிரதேசத்தில் சிங்கராஜ வனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 47 மற்றும் 52 வயதான ஜேர்மனியர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வன பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள வழிக்காட்டி ஒருவருடன் சிங்கராஜ வனத்திற்குள் பயணம் செய்துள்ளதுடன் ஒருவர் காட்டில் இருந்த ஓணான் ஒன்றை பிடித்து பைக்குள் போட்டுள்ளார்.
இதனை கண்ட வழிக்காட்டி அது பற்றி சிங்கராஜ பசுமை நண்பர்கள் அமைப்புக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர் தெனியாய பொலிஸார் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜேர்மனிய பிரஜைகள் தங்கி இருந்த ஹொட்டலுக்கு சென்ற அதிகாரிகள், ஹொட்டல் முகாமையாளரின் உதவியுடன் அவர்கள் தங்கி இருந்த அறையை சோதனையிட்டுள்ளதுடன் அங்கு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடல் நண்டுகள், அட்டைகள், இலங்கையில் மாத்திரம் காணப்படும் கரப்பான்கள், எறும்புகள் மற்றும் தாவரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஜேர்மனியர்கள் மொரவக்க நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.