எதிர்கால சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சரின் சம்பளத்தை வழங்குவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கொடுப்பனவை மட்டுமே பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில், கூறியுள்ளார் .இந்த தீர்மானம் அனைத்து கட்சி ஆட்சி அமைந்ததும் அமைச்சரவை முடிவாக நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் ஒரே உத்தியோகபூர்வ வாகனம் வழங்கப்படுமென அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய இடைக்கால அமைச்சரவையின் அமைச்சர்களும் ஒரு வருட காலத்திற்கான உறுப்பினர் கொடுப்பனவை மாத்திரமே பெறுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்திருந்தார்.
எதிர்காலத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை 30 இலாகாக்களுக்கு மட்டுப்படுத்தப்படும் அதே வேளையில் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேசமயம் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மை கட்சி தலைவர்கள் பலர் அமைச்சர் பதவிகளை பெற உள்ளனர். இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தில் பதவியேற்றுள்ள அனைத்து அரசியல் தலைவர்களின் எரிபொருள் மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகளும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர்கள் தங்கள் பணிகளுக்கான உதவித்தொகையை மட்டுமே பெறுவார்கள் மற்றும் ஓட்டுநர் கார்களை வழங்குவதை நிறுத்தி வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
அறிக்கைகளின்படி, அண்மைக் காலத்தில் அரசியல் நியமனங்களுக்கு அரசாங்க நிதியின் பாரிய பகுதி செலவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கார்களும் இன்னும் திரும்பக் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அந்தந்த அமைச்சகங்களுக்கு நிதியை குவிப்பதற்காக அமைச்சகங்களில் உள்ள பழைய வாகனங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத குப்பைகளை ஏலம் விட எதிர்க்கட்சிகள் முன்மொழிய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் மிகப் பெரிய பழைய வாகனங்களைக் கொண்ட அமைச்சகம் நிதியமைச்சகம் என்றும், இதற்குப் பின்னால் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவை உள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.