ஜனாதிபதிச் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதிச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலுக்கு இணையாக, அமைச்சுகளின் செயலாளர்களின் பணிப்புரைகளை மதிப்பீடு செய்வதற்காக ‘செயல்திறன் ஒப்பந்தங்கள்’ கையெழுத்திடப்பட்டதுடன், வருடத்திற்கு இருமுறை இந்த செயல்திறன்களை மதிப்பீடு செய்யவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு அமைச்சுக்கும் மூலதன வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விதம், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டிய திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
முதலீடுகளின் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களை தாமதமின்றி ஆரம்பிப்பதற்கு முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

