மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட 1 இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் ஏற்றப்படுகின்றது.
அந்த நிலையில் மட்டக்களப்பு கல்லடியில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை பேசியவாறே பலருக்கு தடுப்பூசி ஏற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.குறித்த சுகாதார பரிசோதகர் ஊசி ஏற்றுவதில் தனது கவனத்தைச் செலுத்தாமல் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஊசி ஏற்றியதன் காரணமாக அங்கு தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட யுவதி அழுதுகொண்டு வெளியேறியமையினை காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துளள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவும் தாய் ஒருவருக்கு ஒரே கையில் இரண்டு ஊசிகள் போடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருக்கும் நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பில் தொலைபேசியில் பேசியவாறு தடுப்பூசி ஏற்றியமை பலரிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார பரிசோதகரின் அசமந்தப் போக்கு காரணமாக ஒட்டுமொத்த சுகாதார பரிசோதகர்களுக்கும் ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் இவரது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதுடன், சுகாதாரத்துறை மீது மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்பு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.