தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்டு, அவற்றினை விழுங்கி பின்னர் சூட்சுமமான முறையில் எடுத்து விற்பனை செய்துவந்த இளைஞனை பதுளை பொலிஸார் இன்று கைது செய்தனர்.
பதுளை, வினித்தகம என்ற கிராமத்தைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோருடன், விகாரைக்கு வந்திருந்த 16 வயது சிறுவனுடன், மேற்படி இளைஞன் உறவாடி, சிறுவன் கையில் அணிந்திருந்த (பேஸ்லெட்) தங்கக் கைச் சங்கிலியைப் பெற்று, விழுங்கியுள்ளார்.
இதனை அச்சிறுவன் தமது பெற்றோரிடம் கூற, பெற்றோர் வருமுன், இளைஞன் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்ட போது, தான் அச் சங்கிலியை விழுங்கிவிட்டதாகக் கூறியு நிலையில், பொலிசார் இளைஞரை பதுளை வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி டபிள்யு. பி.விஜேதுங்கவிடம் ஒப்படைத்ததும், அந் நபர் ‘எக்ஸ்ரே’ பரிசீலனைக்குற்படுத்தப்பட்டார்.
பரிசோதனையில் சந்தேகநபரின் வயிற்றுக்குள் தங்கச் சங்கிலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கச் சங்கிலி நான்கு இலட்ச ரூபா பெறுமதியாகுமென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்பின்னர் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் நிறுத்தப்பட்டு, மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக, தங்கச் சங்கிலி மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணையில் இது போன்று தங்கச் சங்கிலி கொள்ளைகள் பலவற்றில் ஈடுபட்டுள்ளமையும், விழுங்கப்பட்ட நகைகளை மீள சூட்சுமமாக எடுத்து விற்பனை செய்துவந்தமை கண்டறியப்பட்டது.