இலங்கையில் சிங்களவர்கள் தான் முதன்மையானவர்கள் என எண்ணி அப்பாவி தமிழர்களை கொலை செய்துவிட்டோம் என, கொழும்பு, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்கள ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“நாட்டில் குண்டு போட்டு மகிந்த குடும்பத்தினர் வீரர்களாக திகழ்ந்தார்கள். 69 லட்ச மக்களுக்கும் அவர்கள் வீரர்களாக காணப்பட்டார்கள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தவறை மக்களாகிய நாங்களும் ஏற்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். 80ஆம் ஆண்டுகளில் இனப்படுகொலைகள் நடந்த போது நாங்கள் அமைதியாக இருந்தோம். ஏன் என்றால் எங்கள் பிள்ளைகள் யாரும் உயிரிழக்கவில்லை.
வடக்கில் ஆயுதங்களுடன் வந்தவர்கள் சிங்களவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டும் என கூறவில்லை. தங்கள் மொழியில் பேச விடுங்கள் என்றே கூறினார்கள்.
தங்களை மனிதர்களாக வாழ விடுங்கள் என்றே கூறினார்கள். எனினும் சிங்கள மொழி தான் உயர்ந்தது எங்கள் மதம் மாத்திரமே உயர்ந்தது என கூறி தமிழர்களை கொலை செய்வதற்கு நாங்கள் இடமளித்தோம்.
அந்த குற்றங்களிற்கான விலையை தற்போது நாங்கள் செலுத்தி கொண்டிருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.