கல்முனையில் கடத்தல் முயற்சி இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராகுல் இராஜபுத்திரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட் பொய்யானதும், தவறாக வழிநடத்துவதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் தலைமையகம் இது குறித்த தெளிவுபடுத்தல்களை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் தலைமையக தகவலின்படி, வியாழன் அன்று, சாணக்கியன் தனது ருவிட்டர் கணக்கில் தமிழ் அரசியல் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் ஒருவரை இனந்தெரியாதவர்கள் கடத்த முயற்சித்ததாக தெரிவித்திருந்தார்.
“அரச உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட இனந்தெரியாதவர்கள், புகைப்படத்தில் உள்ள வெள்ளை வாகனத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சிஇளைஞர் அணி உறுப்பினரை கடத்த முயன்றனர்.
இது தொடர்பாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது” என ருவிட் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் அணியினர் மேற்கொள்ளும் கையெழுத்து பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஒருவரையே கடத்த முயற்சித்ததாக தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அப்படியொரு கடத்தல் முயற்சி சம்பவம் நடக்கவில்லையென்பது தெரிய வந்தது.
வெள்ளை வாகனத்தில் பயணித்த மருதமுனையை சேர்ந்த இளைஞர் குழுவினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அருள் ஞானமூர்த்தி நிதான்ஷன் என்ற இளைஞரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை வாகனத்தில் பயணித்த இருவர் வர்த்தகர்கள் என்றும், அரச புலனாய்வுப் பிரிவுகளுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள் என்றும், நிதான்ஷன் கடத்தப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
“எனவே சாணக்கியன் ராஜபுத்திரன் என்ற நபரின் ருவிட்… மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் பிற செய்திகள் தவறானவை மற்றும் தவறாக வழிநடத்துகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை மாவட்ட ஏஉதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொள்கிறார்’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது