பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு ஒருவரின் ஆஸ்ரமத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குருணாகல் மெல்சிறிபுர மாதபொல பிரதேசத்தில் அமைந்துள்ள உமந்தா விகாரைக்கு பிரதமர் விஜயம் செய்து, அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளார்.
சிறி சமந்தபத்ர தேரர் இந்த விகாரையின் விகாரதிபதியாக செயற்பட்டு வருகிறார். பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தென்பத் டிஷான் குணசேகரவுடன் அங்கு சென்றுள்ளார்.
பிட்டிதுவே சிறிதம்ம தேரர் என அழைக்கப்பட்டு வரும் சிறிசமந்தபத்ர தேரர் தான் முக்தியடைந்து விட்டதாக கூறி பௌத்த சமயத்தை திரிபுப்படுத்தி போதனைகளை செய்து வருவதாக ஏனைய பௌத்த பிக்குகள் குற்றம் சுமத்தி வந்தனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் சிறிசமந்தபத்ர தேரர், மாநாயக்க தேரர்களிடம் நேரடியாக சென்று மன்னிப்பும் கோரியிருந்தார். எவ்வாறாயினும் பின்னர் இந்த பிரச்சினை சமரசம் செய்துக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எது எப்படி இருந்த போதிலும் உமந்தவ விகாரை அமைந்துள்ள வளாகத்தில் இயற்கை விவசாயம் உட்பட இயற்கையிலான பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருதுடன் அவற்றில் விளையும் உணவுகளே அங்கு செல்வோருக்கு தானமாக வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் அங்கு தியான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்றனர்.