இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையில் சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு பிரதமர் அலுவலகத்தில் நேற்று கூடியிருந்தது.
இதன்போதே சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குபவர்களுக்கு நான்கு மாதங்களுக்கான 34 பில்லியன் ரூபாய் நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
14 அத்தியாவசிய மருந்துகளில் 2 மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் இல்லை எனவும் அதில் ஒன்று இதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து எனவும் அதற்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெளிநோயாளர்களுக்கான மருந்து தற்போது காலாவதியாகிவிட்டதாகவும், அதற்கு மாற்று மருந்து இல்லை என்றும், ஆனால் தனியார் துறையிடம் அவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது வைத்தியசாலைகளில் 49 மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், சத்திரசிகிச்சைக்கு தேவையான 7 ஆயிரத்து 854 சத்திரசிகிச்சை கருவிகளில், 2 ஆயிரத்து 48 கருவிகள் முறையான பாவனையில் இருக்க வேண்டும் எனவும் ஆனால் அவற்றில் ஆயிரத்து 155 மருந்துகள் தற்போது கிடைக்கவில்லை எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்வெட்டு நேரத்தில் டீசல் பிரச்சனை காரணமாக மின்பிறப்பாக்கிகளை இயக்க முடியாமல் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும், டொலர் பிரச்சனை காரணமாக மருந்து இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 80 வீதமான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வது தற்போது பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.