மனித உரிமை மீறல்கள் தொடர்பில், மனித உரிமைகள் சட்டத்தரணி- அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்களுக்கு இலங்கையின் பொது அமைப்புக்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு, அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்கள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்ட நிலையிலேயே பொது அமைப்புக்கள், சற்குணநாதனுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
161 தனிப்பட்டவர்கள் மற்றும் 47 அமைப்புக்கள் இணைந்த வலையமைப்பே இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
அம்பிகா சற்குணநாதன், தமது சொந்தக்கருத்தையே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவுக்கு வழங்கியிருந்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு, தமது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தது.
இந்தநிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சின் விமர்சனம், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான விடயம் என்று பொது அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் பொதுதுறையினரை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடாக தாம் இதனை கருதுவதாகவும் அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஒரு தமிழ் ஆய்வாளரின் சுதந்திரமான வாதத்தை விடுதலைப்புலிகளின் கூற்றுக்களுடன், இலங்கையின் வெளியுறவு அமைச்சு ஒப்பிடுவது தேவையற்றது என்றும் குறித்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேநேரம் தொடர்ந்தும் பொது அமைப்புக்களின் மற்றும் மனித உரிமை ஆரவலர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என்று இலங்கையின் பொது அமைப்புக்கள் கோரியுள்ளன.