இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயற்சித்த 206 நட்சத்திர ஆமைகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
விமான நிலையத்தின் விமான சரக்கு ஏற்றுமதி முனையத்தில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுங்க பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத் டி சில்வா தெரிவித்தார்.
குறித்த ஆமைகள் சாக்குகளில் சுற்றப்பட்டு, 6 பெட்டிகளில் அடைக்கப்பட்டு, “உலர்ந்த கடல் உணவுகள்” என்று குறியிடப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை நட்சத்திர ஆமைகள், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் காணப்படும் ஜியோசெலோன் எலிகன்ஸ் இனத்தை சார்ந்தவையாகும்.
இருப்பினும், அவை ஒரு குறிப்பிட்ட புவிசார் அடையாளத்தைக் கொண்டுள்ளன.
இது உலகில் காணப்படும் மிக அழகான ஆமை இனங்களில் ஒன்றாகும். இதன்காரணமாக இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது.
இதன் விளைவாக இந்த ஆமை இனம் அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
மேலும், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) விலங்கினங்களின் சிவப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் விலங்கினங்கள் மற்றும் தாவர பாதுகாப்பு சட்டத்தின்படி, இத்தகைய அரிய வகை விலங்குகளை அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதியை வர்த்தகம் செய்வது குற்றமாகும்.
இவ் விடயம் தொடர்பில் இலங்கை சுங்கத்தின், பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைப் பாதுகாப்புப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன