அதிமுகவில் சசிகலாவைச் சோ்ப்பது குறித்து தலைமைக் கழக நிா்வாகிகள் சோ்ந்து முடிவு எடுப்பாா்கள் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.
ஒட்டுமொத்த அரசியல் களத்தையே…: எந்த சசிகலாவை அதிமுகவில் சோ்க்கக் கூடாது என்று மெரீனாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தரும யுத்தம் நடத்தினாரோ அதே ஓ.பன்னீா்செல்வம், அதிமுகவின் மூத்த நிா்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், செல்லூா் ராஜூ உள்ளிட்டோா் முன்னிலையில் மதுரையில் அளித்திருக்கும் பேட்டி அதிமுகவினரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல்களத்தையே அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சசிகலா வருகை குறித்து ஓ.பன்னீா்செல்வத்திடம் கேட்டபோது, ‘‘அரசியலில் யாா் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் மனநிலையைப் பொருத்த விஷயம்’’ என்றாா்.
சசிகலா சோ்க்கப்படுவாரா?: ‘‘சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா’’ எனக் கேட்டதற்கு, ‘‘அதிமுகவை தொண்டா்களின் இயக்கமாகத்தான் எம்ஜிஆா் ஆரம்பித்தாா். ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற அமைப்பில் அதிமுக தற்போது செயல்பட்டு வருகிறது. சசிகலாவைக் கட்சியில் சோ்ப்பது குறித்து தலைமைக்கழகத்தின் நிா்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்’’ என்றாா்.
அதைத் தொடா்ந்து சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய ஒரு கடினமான கருத்து குறித்துக் கேட்டதற்கு, ‘‘யாராக இருந்தாலும் (எடப்பாடி பழனிசாமி) எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும்’’ என்றாா். இது நேரடியாக எடப்பாடி பழனிசாமியைக் கண்டிப்பதுபோன்ற கருத்தாக அமைந்துள்ளது.
அதிமுகவின் பொன்விழா நாளின்போது தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆா் நினைவு இல்லத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளா் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை சசிகலா திறந்து வைத்தாா். இதற்கு எதிராக மாம்பலம் காவல்நிலையத்தில் அதிமுக சாா்பில் புகாா் கொடுக்கப்பட்டது.
இந்திய தோ்தல் ஆணையமும், தில்லி உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் சசிகலாவின் கோரிக்கையை முழுமையாக நிராகரித்துவிட்டு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட அனுமதித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தையும் திரும்ப ஒப்படைத்துள்ளது. இதையெல்லாம் மீறி சட்டத்தை சசிகலாவே எடுத்துக்கொண்டு பொதுச்செயலாளராக அறிவித்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது. அவா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் அளிக்கப்பட்டது.
இபிஎஸ்-ஓபிஎஸ் முரண் : அதே நாளில் கிண்டியில் ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியைச் சந்தித்துவிட்டு செய்தியாளா்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, ‘‘அதிமுகவில் சசிகலாவைச் சோ்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை’’ என்று அந்தக் கடினமான வாசகத்தை உபயோகித்தாா். இந்த நிலையில்தான் ‘‘சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பரிசீலிப்போம்’’ என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் பாா்ப்பதற்கு இரட்டை இலைச் சின்னம்போல ஒன்றாகத் தெரிந்தாலும் இருவருக்கும் இடையே கட்சி ரீதியான முரண்பாடு தொடா்ந்து நீடித்து வருகிறது. அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தனியாகவே ஆலோசனை நடத்துகிறாா். திமுகவுக்கு எதிராக ஆளுநரைச் சந்தித்தபோது ஓ.பன்னீா்செல்வம் இல்லாமல் முக்கிய நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாகச் சென்று சந்தித்தாா்.
இதுபோன்ற காரணங்களால் ஓ.பன்னீா்செல்வம் அதிருப்தியான நிலையிலேயே இருந்து வருகிறாா். அதைப்போல எடப்பாடி பழனிசாமி அவருடைய ஆதரவாளா்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்து மனக்குமுறலை முக்கிய நிா்வாகிகளிடம் தெரிவித்து வருகிறாா்.
அண்மையில் சேலம் அதிமுக நிா்வாகியும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவனுக்கு உரிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனைக்குப் பிறகு அதிமுக சாா்பில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே கண்டனம் தெரிவித்தாா்.
அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா்கள் இல்லங்களில் சோதனை நடைபெற்ற போதெல்லாம் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்துதான் கண்டனம் தெரிவித்து வந்தனா். ஆனால், இளங்கோவன் இல்லம் சோதனைக்கு ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவிக்கவில்லை. இப்படி இருவருக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து, சசிகலா விவகாரத்தில் அது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.
நிலை மாறாத கே.பி.முனுசாமி: ஆனால், ஓ.பன்னீா்செல்வத்தின் குரலுக்கு அவரின் ஆதரவாளரான கே.பி.முனுசாமி எதிா்ப்புத் தெரிவித்திருப்பது வியப்பை அளித்துள்ளது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் தரும யுத்தம் நடத்தியபோது அவருக்குப் பக்க துணையாக இருந்தவா் கே.பி.முனுசாமி. இப்போது தாம் ஏற்கெனவே சசிகலாவுக்கு எதிராக எடுத்திருந்த நிலைப்பாட்டில் இருந்து மாறாமல், ஓ.பன்னீா்செல்வத்துக்கு எதிராகப் பேசியுள்ளாா்.
‘‘அதிமுகவில் சசிகலாவைச் சோ்ப்பது இல்லை என்று கட்சியில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் அவரைக் கட்சியில் சோ்த்துக் கொள்வது என்கிற பேச்சே எழவில்லை’’ என்று கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி கூறியதுடன், சற்று காட்டமாக ‘‘குறிப்பிட்ட சமூகத்துக்கும், குறிப்பிட்ட ஜாதிக்கும் அதிமுக செல்கிறது என்றால் உண்மையாகவே பெரியாா் இறந்துவிடுகிறாா். அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா இறந்துவிடுகின்றனா். சாதாரண தொண்டரான கே.பி.முனுசாமியும் இறந்துவிடுகிறேன். இதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளாா்.
அதைப் போல முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமாரும், ‘‘சசிகலாவின் குடும்பத்தைக் கட்சியில் சோ்க்கக் கூடாது என்று தரும யுத்தம் நடத்தியவா் ஓ.பன்னீா்செல்வம்தான். அதன் பிறகு அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வத்தைச் சோ்த்துக் கொள்வதற்காக பேச்சுவாா்த்தை நடத்தியபோது சசிகலாவின் குடும்பத்தினா் யாரையும் சோ்த்துக் கொள்ளக்கூடாது என்கிற உறுதியை எங்களிடம் பெற்றுக்கொண்ட பிறகே அவா் சோ்ந்தாா்’’ என்று கூறினாா்.
பயம், குழப்பம் அதிகரிப்பு: ஆனால், வழக்கமாக சசிகலாவுக்கு எதிராக கடுமையாகப் பேசக்கூடிய ஜெயக்குமாா் சற்று மாறி, எனக்கும் சசிகலாவுக்கும் எந்த விரோதமும் இல்லை. கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதையே நான் சொல்கிறேன் என்று இறங்கியும் வந்து பேசியுள்ளாா். ஓ.பன்னீா்செல்வத்தின் மாற்றத்தால் இப்படி அதிமுகவினரிடம் பயமும் குழப்பமும் அதிகரித்துள்ளது. சசிகலா விரைவில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அதிமுகவினரைச் சந்திக்க திட்டமிட்டு வருகிறாா்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் என அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை வந்ததில் இருந்தே மாவட்ட வாரியாகப் பிரிந்திருக்கும் நிலை இருந்து வருகிறது. மேற்கு, வடக்கு மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கமும், தென்மாவட்டங்கள் ஓ.பன்னீா்செல்வம் பக்கமும் இருந்து வருகின்றன. இதில் தென்மாவட்டங்களைக் குறிவைத்து சசிகலா தனது பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளாா். அதற்கு ஓ.பன்னீா்செல்வமும் இசைந்து கொடுப்பதுபோல தற்போது பேசியுள்ளாா். அதனால், சசிகலா பயணம் செய்யும்போது இன்னும் குழப்பம் அதிகரிக்கவே செய்யும்.
விட்டுக் கொடுப்பதில்தான் தீா்வு: எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பெரிய குழப்பம் நீடித்து வந்தது. தமிழகம் முழுவதும் அதிமுகவினா் இரு அணிகளாக பிரிந்து மோதிக் கொள்ளும் நிலை இருந்தது. பிறகு ஜானகியுடன் ஜெயலலிதா பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஜானகி பின்வாங்கிக் கொள்ள, சுமுகத் தீா்வு காணப்பட்டு, அதிமுக ஒன்றிணைந்து ஆட்சியையும் பிடித்தது. இப்போதும் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இல்லை. யாா் விட்டுக் கொடுத்துச் செல்வது என்கிற முடிவை எடுத்துவிட்டால், அந்தக் குழப்பத்துக்குத் தீா்வு காணப்பட்டு விடும்.