இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு கோப் குழுவினால் பல பரிந்துரைகள்,
1. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் இதுவரை காலதாமதமாகியுள்ள அனைத்து வருடாந்த அறிக்கைகளையும் ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழு பரிந்துரை.
2. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் மாலைதீவு மற்றும் சீஷெல்ஸில் உள்ள பெரும் நிதி இழப்பைச் சந்தித்துள்ள இரண்டு கிளைகளை முறையாக மூடுவதற்கு கோப் குழுவினால் வெளிவிவகார அமைச்சுக்கு அவதானிப்புகளை அனுப்ப நடவடிக்கை.
3. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஜனாதிபதி செயலகத்தினால் தற்போது பயன்படுத்தப்படும் காணி மற்றும் கட்டடம் தொடர்பான குத்தகை ஒப்பந்தம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்ககுக் கோப் குழு அறிவுறுத்தல்.
4. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய போலி தரகர்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அறிவுறுத்தல்.
5. நீண்ட கால காப்பீட்டு வணிகம் மற்றும் பொதுக் காப்பீட்டு வணிகம் இரண்டையும் தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரை.
6. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் எதிர்கால சந்தைப்படுத்தல் மூலோபாயத் திட்டங்கள் குறித்த அறிக்கையை விரைவில் குழுவிடம் சமர்புக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்குப் பரிந்துரை.
7. காப்புறுதி இழப்பீட்டை பெறுவதற்கான நடைமுறை குறித்து காப்புறுதியாளர்களுக்கு முறையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோப் தலைவர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பு.
8. கூட்டுத்தாபனத்தின் மொத்த மனிதவளத்தை கணக்காய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழு அறிவிப்பு.
9. நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் உள்ள 93 பேருக்கு சம்பளம் வழங்க 700 மில்லியன் ரூபா செலவாகும் மேனேஜ்மண்ட் சேர்விஸ் காப்புறுதி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதன் தேவை குறித்த கருத்தை அறிவிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழு பரிந்துரை.
10. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் விலைமனுக் கோரி அமைச்சரவையின் அனுமதியுடன், தனி தரப்பினரிடமிருந்து விலைமனுக் கோரி 100 டொலர் விலைமனுப் பெறுமதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்புடைய அரேபிய நாடுகளிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்தியமை சம்பந்தமாக கூட்டுத்தாபனத்தின் வகிபங்கு தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கோப் குழு பரிந்துரை.
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (08) பாராளுமன்றத்தில் கூடியது. வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 2019 மற்றும் 2020 நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்காமை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் வினவியதுடன் அவ்வாறு வருடாந்த அறிக்கைகளை தாமதமாக்குவது நிறுவனம் பாராளுமன்றத்தை புறக்கணிப்பதை உணர்த்துகிறது எனக் குறிப்பிட்டார். வருடாந்த அறிக்கைகளை தாமதமாக்குவதால் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்த நிறுவனங்களின் வருடாந்த நிதி நிலைமை தொடர்பில் சரியான புரிதலை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாக கோப் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
தற்பொழுது அந்த அறிக்கைகளை நிதியமைச்சுக்கு முன்வைத்துள்ளதாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இதன்போது குறிப்பிட்டார். மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளிலேயே தாமதமடைந்ததாகவும் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, காலதாமதமாகியுள்ள அனைத்து வருடாந்த அறிக்கைகளையும் ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்தது. அதேபோன்று, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் மாலைதீவு மற்றும் சீஷெல்ஸில் உள்ள பெரும் நிதி இழப்பைச் சந்தித்துள்ள இரண்டு கிளைகளை இதுவரை முறையாக மூடுவதற்கு முடியாமல் போயுள்ளமை குறித்து குழு கவனம் செலுத்தியது. தற்பொழுது அந்தக் கிளைகள் இயங்குவதில்லை என்பதனால் அதற்காக நிதி செலவிடப்படுவதில்லை எனவும், அவற்றிலுள்ள நிதி அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிதி அதிகாரி சுட்டிக்காட்டினார். அதேபோன்று மாலைதீவு உள்நாட்டு இறைவரி அதிகாரசபையின் வரி அனுமதி நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் உரிய நிறுவனத்தை மூடும் பணிகளை நிறைவுசெய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்தப் பணியை நிறைவு செய்ய கோப் குழுவினால் வெளிவிவகார அமைச்சுக்கு அவதானிப்புகளை அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.
வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஜனாதிபதி செயலகத்தினால் தற்போது பயன்படுத்தப்படும் காணி மற்றும் கட்டடத்தின் குத்தகை ஒப்பந்தம் தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி செயலகத்துக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 798,000,000 ரூபாய் மதிப்பீடு செய்யப்பட நியாயமான பெறுமதிவாய்ந்த சொத்துக்கள் கடந்த ஆண்டில் மீண்டும் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டது எனினும், கொவிட் தொற்று காரணமாக ஜனாதிபதி செயலகத்தினால் மீண்டும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது.
இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகையில், இரு தரப்பினருக்கும் இடையில் காணப்பட்ட கலந்துரையாடலில் குறித்த காணியை பயன்படுத்திய காலத்துக்கான நிலுவை வாடகையை தவணை முறையில் செலுத்துவதற்கும் 2023 ஜனவரி முதல் புதிய ஒப்பந்தத்திற்கு வருவதற்கும் ஜனாதிபதி செயலகம் இணங்கியதாகத் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களில் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு இதன்போது கோப் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய போலி தரகர்களுக்கு எதிரான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் 2014 இல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் குழு வினவியது.
காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்தப்பட்டிருந்த போது இது இடம்பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் அது தொடர்பில் கண்டறியவில்லை எனவும் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். எனினும் அது தொடர்பில் கண்டறிந்து நிலைமையை அறிக்கையிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
மேலும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கட்டமைப்பில் நீண்ட கால காப்பீட்டு வணிகம் மற்றும் பொதுக் காப்பீட்டு வணிகம் இரண்டையும் தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்காமை தொடர்பில் கோப் குழு அதிகாரிகளிடம் வினவியது.
இதன்போது கோப் தலைவர் குறிப்பிடுகையில், குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பீட்டு ஆய்வுக்கமைய 2021 இல் இலங்கையில் ஆயுள் காப்புறுதிச் சந்தை 21% இனால் விருத்தியடைந்துள்ளது எனினும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆயுள் காப்புறுதிச் சந்தை 14% இனால் மாத்திரமே விருத்தியடைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். இலங்கையில் ஏனைய காப்புறுதி நிறுவனங்கள் நீண்ட கால காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு என்பவற்றை வேறுவேறாக பேணி வருவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
இதன்போது கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிடுகையில், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம் என்ற வகையில் அவ்வாறு வேறு பிரிப்பது அவசியமில்லை எனினும், அது தொடர்பில் சரியான தீர்மானமொன்றை வழங்குமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் குழு விரிவாகக் கலந்துரையாடியதுடன் இதற்கு விரைவில் தீர்மானமொன்றை வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சந்தைப் பங்குகளை கூட்டுவதற்கான மூலோபாயங்கள் தொடர்பில் கோப் குழு கவனம் செலுத்தியது. கடந்த ஆண்டில் தமது சந்தைப் பங்குகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் தற்போது அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் ஜனவரி வரை ஆயுள் காப்புறுதி சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு விருத்தியடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான மொத்தச் சொத்துக்கள் 184 பில்லியன் ரூபாய் என சுட்டிக்காட்டிய கோப் தலைவர் கூட்டுத்தாபனத்தின் எதிர்கால சந்தைப்படுத்தல் மூலோபாயத் திட்டங்கள் குறித்த அறிக்கையை விரைவில் குழுவிடம் சமர்புக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்குப் பரிந்துரைத்தார்.
காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக்கொள்ளும் போது காப்புறுதி நிறுவனங்களால் சரியாக மக்களை அறிவுறுத்தாமை காரணமாக காப்புறுதியாளர்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாக கோப் குழு உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். விசேடமாக இழப்பீட்டை பெறும்போது சம்பந்தப்பட்ட பட்டியலின் மூலப்பிரதியை சமர்ப்பிக்கத் தவறும்போது காப்புறுதியாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டின்னர். இது தொடர்பில் காப்புறுதியாளர்களுக்கு முறையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோப் தலைவர் இதன்போது அறிவுறுத்தினார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணியாட்கள் தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. நிறுவனத்தில் நிரந்தர பணியாட்கள் 2535 பேரும் ஒப்பந்த அடிப்படையில் 232 பேரும் பணியாற்றுவதாக பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். பணியாட்களின் செயலாற்றுகையை மதிப்பீடு செய்யும் நோக்கில் செயல்திறன் குறிகாட்டியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கூட்டுத்தாபனத்தின் மொத்த மனிதவளத்தை கணக்காய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழு அறிவுறுத்தியது.
காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினரின் சம்பள மட்டத்தை தீர்மானிப்பதற்கு மேனேஜ்மண்ட் சேர்விஸ் காப்புறுதி நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதன் அவசியம் தொடர்பில் கோப் குழு, கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினரிடம் கேள்வியெழுப்பியது. நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் உள்ள 93 பேருக்கு சம்பளம் வழங்க 700 மில்லியன் ரூபா செலவாவதாக இங்கு புலப்பட்டது.
இதன்போது அதிகாரிகள் குறிப்பிடுகையில், காப்புறுதிச் சந்தை மிகவும் போட்டித்தன்மை மிக்கது என்பதால் உயர்மட்ட நிர்வாகத்தினரின் சம்பள விபரத்தின் இரகசியத்தன்மையை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனத் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தை பேணுவது குறித்து சரியான கருத்தை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிளைகளின் செயலாற்றுகை தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் முறையான மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டிய கோப் தலைவர் உரிய கிளைகள் தொடர்பான சரியான தகவல்களை கணக்காய்வாளருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்தார்.
காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் பயன்படுத்தப்படும் தகவல் தொழிநுட்ப வலையமைப்பு தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள உத்தேச தகவல் தொழிநுட்ப வலையமைப்பு மற்றும் அதற்காக நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது பற்றி கோப் குழு இதன்போது வினவியது.
2015 இல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அரேபிய நாடுகளிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், அதனை விலைமனுக்கோராமல் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியொன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதனை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியிருந்ததுடன், கூட்டுத்தாபனத்தினால் தனித் தரப்பினரிடமிருந்து விலைமனுக் கோரி 100 டொலர் விலைமனுப் பெறுமதியில் வழங்கியமை தொடர்பில் குழு விரிவாகக் கேள்வியெழுப்பியது. கணக்காய்வாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுக்கு அமைய பல மில்லியன் நட்டமடைந்த இந்த கொடுக்கல் வாங்கள் தொடர்பில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் எந்தத் தகவலும் இல்லை என்பது குழுவில் புலப்பட்டது.
இதன்போது கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிடுகையில், கூட்டுத்தாபனத்தினால் காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் நிர்வாகப் பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதால் அதற்கான கட்டணம் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை மீண்டும் குழுவுக்கு அழைக்கும் போது காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கோப் தலைவர் இதன்போது தெரிவித்தார். அதேபோன்று, இது தொடர்பில் தகவல்களை கண்டறிந்து ஆவணங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கோப் குழு பரிந்துரை வழங்கியது.
அதற்கு மேலதிகமாக, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான பொரளை, கின்ஸி வீதியிலுள்ள மெகா பிரான்ச் கட்டடம் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையொன்றை வழங்குமாறு கோப் தலைவர் கணக்காய்வாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ லொஹான் ரத்வத்தே, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா, கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ எஸ்.எம்.எம். முஸ்ஸாரப், கௌரவ ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.