கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று (28) முதல் 55 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது.
முட்டை விலையானது, நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முட்டையை குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில், அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்த இணக்கப்பாட்டுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 20 சிறிய ரக பாரவூர்திகளைப் பயன்படுத்தி, இன்றைய தினம், கொழும்பு நகரின் பல பாகங்களிலும், கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளிலும், முட்டையை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கோட்டை தொடரூந்து நிலையம், தெமட்டகொடை, கொம்பனித்தெரு, தெஹிவளை, பத்தரமுல்லை, நுகேகோடை, மஹரகம, மீகொடை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலும், ஹோமாகமயிலும், முட்டையை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம், வத்தளை, ஜாஎல, ராகம, நீர்கொழும்பு, கிரிபத்கொடை, கடவத்தை மற்றும் பேலியகொடை பகுதியிலும் சிறிய ரக பாரவூர்திகள் மூலம் 55 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இன்று முதல், 20 சிறிய ரக பாரவூர்திகளில், கொழும்புக்கு நான்கரை இலட்சம் முட்டைகள் கொண்டு செல்லப்பட உள்ளதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நுகர்வோருக்கு, 25 முதல் 50 முட்டைகளும், உணவகங்களுக்கு, 100 முதல் 200 முட்டைகளும், விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்