நிக்கவரட்டிய அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் யூ.எஸ்.எம். கபில பிரியந்த சபுகுமார என்வரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பன்பொல பிரதேச செயலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படும் பொது மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள தனது மோட்டார் சைக்கிளில் குறித்த கிராம சேவகர் சென்றுகொண்டிருந்தார்.
இதன்போது வேனில் வந்த அடையாளம் தெரியாதோர் அவரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
பழைமையான பயிர்ச்செய்கை முறைமைகள், பழைய நெல் வகைகளை சேர்த்து, சுற்றுச் சூழலுடன் ஒத்திசைவான விவசாய முறைமையை மேம்படுத்துவதில் குறித்த கிராம சேவகர் முன்னின்று செயற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நிக்கவரட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஆலோசனைக்கு அமைய, நிக்கவரட்டிய வலய குற்ற விசாரணைப் பிரிவும், அம்பன்பொல பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது