ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) மனித உரிமைகள் அலுவலர் லூடியானா செல்றீன் அகிலன், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, லூடியானா செல்றீன் அகிலன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் ஆகியோரிடம் குறித்த புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.
இதனையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.