நாட்டில் நிலவும் கடும் வரட்சியான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் குறைந்த நீர்மட்டம் காரணமாக நாட்டின் மின் உற்பத்தி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு இப்போது 13 மாகவும், கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் முறையே 13.3 மற்றும் 15 வீதமாக பதிவாகியுள்ளன.
விக்டோரியா, ரந்தெனிகல, சமன் வெவ நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு முறையே 34, 84 மற்றும் 38 சதவீதங்களாக காணப்படுகின்றன. இதன்போது மொத்த மின் உற்பத்தியில் 14 சதவீதம் மட்டுமே நீர்மின் நிலையங்கள் மூலமாகவும், 72.5 சதவீதம் அனல் மின் நிலையங்களில் இருந்தும் கிடைக்கும் நிலையில், நாளாந்த மின்சாரத் தேவை அதிகரித்து, மணித்தியாலத்திற்கு 45.2 ஜிகாவோட்களை எட்டியுள்ளது.
கடந்த வாரம் முதல் நாட்டின் மின் கேள்வி அதிகரித்துள்ளதுடன், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் புதன்கிழமை அன்று 49.53 ஜிகாவோட் அதிக பட்ச மின்சக்தி தேவையாக பதிவாகியதாக குறிப்பிட்டிருந்தார்.