கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதற்கு சென்ற 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நுற்றுக்கணக்கானவர்கள், தடுப்பூசி செலுத்தாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
யூலை மாதம் 06 திகதியும் அதனை அண்டிய சில நாட்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இரண்டாவது தடுப்பூசி இன்றைய தினத்திற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த முதியவர்கள் இன்றை தினம் தங்களுக்கான இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு காலை ஆறு மணிமுதல் சென்று காத்திருந்துள்ளனர்.
சுமார் ஒன்பது மணி வரை இவ்வாறு நூற்றுக்கணக்கான முதியவர்கள் மத்திய கல்லூரி மண்டபத்தில் காத்திருந்தபோதும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை.
இது தொடர்பில் அறிந்த இராணுவத்தினர் சம்பவ இடத்திற்குச்சென்று 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி வரும் ஏழாம் திகதி பின்னர் கிடைக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் எனவே இது தொடர்பான அறிவித்தல் சுகாதாரதுறையினரால் அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் சமூகம் தருமாறும் தெரிவித்து, பொது மக்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதேவேளை இது தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், முதலாவது தடுப்பூசியினை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவத்தினரே செலுத்தினார்கள் எனவே அவர்களே இவர்களுக்கான பதிலளிக்க வேண்டும் என்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பிரிவு அதிகாரிகள்தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் வயோதிப நிலையிலும் தூர இடங்களிலிருந்து வந்த வயோதிபர்கள் ஏமாற்றமடைந்து வீடுகளுக்கு திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.