கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு இலங்கையின் ஆயர்கள் கிறிஸ்தவ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான நிர்வாகம் காரணமாகவும் இலங்கையின் பொருளாதாரம் பேரழிவிற்கு சென்றுள்ளது என்றமையினாலும் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆடம்பரமான கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும் கிறிஸ்மஸ் பருவத்தில் அதிக செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கிறிஸ்தவ மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான மக்கள் நாட்டில் தாக்கம் செலுத்தியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அர்ப்பணிப்பை செய்யுமாறு ஆயர்கள் கோரியுள்ளனர்.
கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ ஆயர்களின் இந்த கோரிக்கையை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாதோர் அனைவரும் கிறிஸ்மஸை ஆடம்பரமான முறையில் கொண்டாட வேண்டாம்.
அலங்காரங்கள் மற்றும் கிறிஸ்மஸ் விருந்துகள் போன்ற தேவையற்ற விடயங்களுக்கு பணத்தை செலவிட வேண்டாம்,
அதற்குபதிலாக ஏழைகளுக்கு உதவ அந்த பணத்தை பயன்படுத்த வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் வலியுறுத்தலையும்,கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல் தொடர்புப் பணிப்பாளர், அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போன்ற பெருந்தன்மையான செயல்கள், தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான அரசியல் முடிவுகள் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்.
முன்னதாக கொரோனா தொற்றுநோயால், ஏற்பட்ட தொழில் இழப்புக்கள் மற்றும் கோட்டாவின் அரசியல் முடிவுகள் என்பன நாட்டில் எல்லாவற்றையும் மோசமாக்கின.
வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு ஏற்பட்டது, இதனையடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவியது.
ஒன்பது மணி நேரத்திற்கும் மேலான மின்சார தடையால், வணிகங்கள் மோசமான பாதிக்கப்பட்டன.
எரிவாயு இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியது, மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பலர் வீடுகளுக்குள் விறகுகளை பயன்படுத்த முடியாததால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக படகுகள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சுற்றுலாத் தொழில் தகர்ந்துபோனது.
உள்ளூர் நாணயம் வீழ்ச்சியடைந்து, பால் மா மற்றும் அவசரகால மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை உணவுகள் தீர்ந்து போகத் தொடங்கியதால், மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல ஆயர்கள், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இந்த போராட்டங்களை தீவிரமாக ஆதரித்தனர். இதனையடுத்து கர்தினாலும், இளைஞர்கள் போராட்டம் நடந்த இடத்திற்குச் சென்று போராட்டத்துக்கு ஆதரவளித்தார்.
இந்தநிலையில் கடந்த மே 9 அன்று அரசு சார்பு குழுவினர் இளைஞர்களை கொடூரமாக தாக்கினர்.
சமூக ஊடகங்களில் இது போன்ற நிகழ்வுகளை பார்த்த கிராமங்களில் உள்ள மக்கள் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீயூட்டினர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவருக்குப் பதிலாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
எனினும் நாடு வழமைக்குத் திரும்ப இரண்டு அல்லது மூன்று வருடங்கள் செல்லும் என்று அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய சூழலில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.