கனடா செல்வதற்காக சட்டவிரோதமாக கப்பல் பயணம் சென்று வியட்நாமில் சிக்கிய 303 இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் தமது வீடுகளிற்கு திரும்பியுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த 151 பேர் கடந்த 28ஆம் திகதி நாடு திரும்பியிருந்தனர். அவர்களில் சிலர் 4 மாதங்களின் பின் வீடு திரும்பினர்.
வீடு காணிகள் அடமானம்
எனினும் பெரும்பாலானவர்கள் 6 மாதங்கள் வரையான காலத்தை தென்கிழக்காசிய நாடுகளில் கழித்துள்ளனர். சிலர் 8 மாதங்களிற்கும் அதிகமான காலத்தை அங்கு கழித்துள்ளனர்.
வீடு திரும்பியவர்கள் சிலர் வியட்நாமில் அகதி அந்தஸ்திற்காக காத்திருக்கும் காலத்தில் வட்டி, கடன் தொகை அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் நாடு திரும்பியதாக தெரிவித்தனர்.
ஏனெனில் , அவர்கள் அனைவரும் கடன் வாங்கியும், வீடு அல்லது காணிகளை அடமானம் வைத்து, இந்த பயணத்திற்காக பணம் திரட்டியுள்ளனர்.
இந்த பயணத்திற்காக ரூ.20 இலட்சம் வழங்கிய இளைஞர் ஒருவர், தான் மாதாந்தம் ரூ.60,000 வட்டி செலுத்த வேண்டியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோத விரோத பயணங்களில் உயிராபத்தை ஏற்படுத்தும் என்பதுடன் கடன் நெருக்கடியிலும் தள்ளிவிடும் என்பதனை இவர்களின் பயணம் உணர்த்தியுள்ளது.