கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தனியாக நின்றுக்கொண்டிருந்ஹ்த சீன பிரஜை ஒருவருக்கு விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உதவியுள்ளனர்.
குறித்த 65 வயதான சீன பிரஜை ஒருவர் கடந்த 28ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இருப்பினும், அவரின் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.
குறித்த நபர் சீனாவுக்கு செல்வதற்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் உணவு இன்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் தகவலறிந்த விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலையத்தின் அதிகாரி அடுத்தகட்ட நடவடிக்களை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக குறித்த சுற்றுலா பயணிக்கு தேவையான உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளனர்.
மேலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகமவின் நேரடி தலையீட்டின் மூலம், சீனத் தூதரகத்தின் ஊடாக அவருக்கு பயணச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து குறித்த சீனப் பிரஜை நேற்று முன்தினம் யுஎல்-884 விமானம் சீனாவுக்கு சென்றுள்ளார்.