முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம் கிராமத்தில் பொதுமகனை மிரட்டி கட்டாய மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதம் மாற்ற சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர், தன்னை பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, மாங்குளம் பொலிஸாரால் வாகனத்துடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிழவன்குளம் பகுதிக்கு, ஹயஸ் ரக வான் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் கடந்த சனிக்கிழமை (27) சென்ற ஒரு குழுவினர், அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று, வீட்டு குடும்பஸ்தரை அழைத்து, தமது மதத்துக்கு மாறுமாறு கலந்துரையாடியுள்ளனர்.
மத மாற்றத்திற்கு அவர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், குடும்பஸ்தரை அங்கு சென்றவர்கள் தரக்குறைவாக பேசியதுடன், கடவுளின் பெயரால் சாபமிட்டு அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கி, மாங்குளம் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் நேற்று மூவரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மாங்குளம் பொலிஸார், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, கிழவன்குளம் பகுதியில், சட்டவிரோதமாக சபைக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டு, மதமாற்ற செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது