கொழும்பு – கல்கிசையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளதாக கல்கிசை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாறைகள் நிறைந்த கடலில் மதுபோதையில் சிலர் பாதுகாப்பற்ற முறையில் நீராடுவதாக கல்கிசை பொலிஸ் கரையோரப் பாதுகாப்புப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்றபோது பாதுகாப்பற்ற இடத்தில் 6 பேர் நீராடுவதனை அவதானித்துள்ளனர்.
இதன்போது, குறித்த இடம் குளிப்பதற்கு பாதுகாப்பற்றது என எச்சரித்து அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பொலிஸாரில் அறிவுறுத்தல்களை காதில்வாங்காத அவர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டதுடன், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் சென்றபோது, அவர்களில் இருவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.