இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து இருதரப்பு கடனாளர்களும் அந்தக் கடனை மறுசீரமைப்பதற்கு பங்களிக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா எப்போதும் உதவியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மற்றவர்களுக்காகக் காத்திருக்காமல், சரியானது என்று நாங்கள் நம்புவதைச் செய்ய இந்தியா முடிவு செய்தது. இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதியளிப்பு உத்தரவாதங்களை வழங்கினோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் அது குறித்து அவர் என்ன நினைக்கின்றார் என்பதை ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்தாகவும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது முக்கியம் என தான் அவரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி விக்ரமசிங்கவை கூடிய விரைவில் இந்தியாவுக்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து கடிதம் ஒன்றை அவர் கையளித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.