எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் பெற்றோலியப் பொருட்கள் உட்பட பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு அதிகளவான நிதியை ஒதுக்கீசெய்ய ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதுடன் வடகிழக்கில் நடைபெறும் கசிப்பு விற்பனையையும் கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
விலைவாசிகளை குறைக்காமல், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தினை அதிகரிக்காமல் நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தமுடியாது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவந்து ஒரு வருடமாகிவிட்டது. ஒரு அரசாங்கம் ஆட்சிக்குவந்து முதலாவது வருடத்தில் செய்யாத விடயத்தினை அதன் பின்னர் வரும்காலங்களில் செய்வது சாத்தியமற்றதாகவேயிருந்து வருகின்றது.
வரவிருக்கின்ற பாதீட்டின் ஊடாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையினை நான் முன்வைக்கின்றேன்.
இலங்கையில் யார் அமைச்சர்களாகயிருக்கின்றார்கள் என்பது எங்களுக்கே தெரியாத நிலையில் அவர்களுக்கான அச்சுறுதல் என்பது இருப்பதற்கான வாய்ப்பில்லை.
யார் அமைச்சர்களாக உள்ளார்கள் என்பதை அவர்கள் எழுதி ஒட்டிக்கொண்டே இனிவரும் காலங்களில் வரவேண்டும். இல்லாது விட்டால் யார் அமைச்சர்கள் என்பதை தெரியாத நிலையே உள்ளது என தெரிவித்தார்.

