பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறையாக அளவுக்கதிகமாக நாணயத்தாள்களை அச்சிடுவதை பிரதானமாகக் கொண்டுள்ளது.
அதற்கமைய தற்போதைய அரசாங்கத்தினால் இதுவரையில் ஒரு கோடி இலட்சம் ரூபா (ஒரு ட்ரில்லியன்) நாணத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. அத்தோடு அண்மையில் ஒரே நாளில் 20, 000 கோடி ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடு இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் பயணிக்க இடமளிக்கக் கூடாது. எனவே நாட்டை சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல ஆட்சியை பொறுப்பேற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்கள் தற்போது அரசியலை முற்றாக வெறுக்கும் மனநிலையில் உள்ளனர். நாடு தொடர்ந்தும் இவ்வாறு செல்வதற்கு இடமளிக்க வேண்டாம். எனவே எம்முடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து நாட்டை சிறந்த பாதையில் கொண்டு செல்ல நாட்டின் சகல பிரஜைகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்