ஜனாதிபதி ஆலோசனை பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் 2ம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற 18 இலட்சத்துக்கும் அதிகமானோரைத் தவிர 2ம் கட்டத்திற்காக 450,924 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறப்பட்டுள்ளன
அவற்றில் நலன்புரி நன்மைகள் பெறத் தகுதியானவர்களை இனங்காணும் பணிகள் இம்மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 1,854,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 58.5 பில்லியன் ரூபா அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள் அல்லது தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க, நலன்புரி நன்மைகள் சபை சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.
இதனிடையே, களத் தகவல் சேகரிப்பை திறம்படச் செய்ய Photo, Map, Voice Recording உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய கைபேசி மென்பொருள் ஒன்றை நலன்புரி நன்மைகள் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, கைபேசி மென்பொருளின் ஊடாக தகவல் சேகரிப்பை முன்னோடி திட்டமாக கொழும்பு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.