நேற்று நள்ளிரவு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரயில்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று தெரிவித்தார்.
நகரங்களுக்கிடையிலான, நீண்ட தூர சேவைகள் மற்றும் விசேட அதிவேக ரயில்களுக்கான கட்டணங்களே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில ரயில்களில் கட்டணங்கள் 60 சதவீதத்தாலும் சில ரயில்களின் கட்டணம் 50 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுமேத சோமரத்ன கூறியுள்ளார்.
ரயில் திணைக்களத்தின் மரபுப்படி மாதத்தின் முதலாம் திகதி கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்ட போதிலும், வரலாற்றில் முதன்முறையாக, தற்போதைய ரயில்வே பொது முகாமையாளர் எவ்வித நடைமுறையும் இன்றி, நிலைய அதிபர்களுக்கு தெரிவிக்காமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் டிக்கெட்டுகள், முன்பதிவு செய்யும் ரயில் நிலையங்களுக்கு மட்டும் இன்று அதிகாலை 1.00 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுஎன சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த நேரத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல எனத் தெரிவித்த சோமரத்ன, சாதாரண மற்றும் பருவப் பயணச் சீட்டுக் கட்டணங்களும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், பொது மக்களுக்கு காலை 10.00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய இணையதளம் திறக்கப்பட்டாலும், சில அதிகாரிகளின் தேவைக்கு இணங்க அதிகாலை 5.00 மணிக்கு டிக்கெட் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக முன்பதிவு ஆசனங்களில் கடும் சிக்கல் நிலவுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.