நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் 250 ரூபாவுக்கு எரிபொருள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து போலியானது என பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் தெரியவந்துள்ளது.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (06.09.2023) பொது வர்த்தக குழு அல்லது கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டனர்.
குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்தமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை தொடர்பில் முன்னாள் தலைவர் மேற்கொண்ட கணக்கீடுகளில் குறைபாடுகள் காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சூலானந்த விக்கிரமரத்ன COP குழு முன் தெரிவித்திருந்தார். அங்கு, இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்கவிடம் இது தொடர்பான அறிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து பொய்யானது என மக்களுக்கு அறிவிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.