கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கிட்டத்தட்ட 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் பொய்யானது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் இன்றையதினம் (06) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கூட்டுத்தாபனம் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அத்துடன் கட்டணங்களைச் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று (05) காலை 10.30 மணி வரை நீடிக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தாமதமின்றி எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை
இந்நிலையில் , தனியார் பௌசர் உரிமையாளர்களும் கூட்டுத்தாபனமும் தாமதமின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய புதிய கட்டண முறையின் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய கட்டண முறையாக, முற்பதிசெய்யும் தினத்துக்கு முதல் நாள் இரவு 9.30 மணிக்கு முன்னர் பணத்தைச் செலுத்த வேண்டும் என, கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.