தேசிய பாதுகாப்புக்கு , ஜனநாயகத்துக்கு உத்தரவாதம் வழங்கி பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச இன்று தமக்கு நெருங்கியவர்களை குற்றங்களில் இருந்து விடுவித்து வருவதையே பார்க்கக்கூடியதாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு சுமத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்ற நிகழ்வுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், வெளியிட்டுள்ளார்.
கொரோனாவினால், இந்த நாட்டில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.
அதேபோன்று இன்று பொருளாதாரத்தின் மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்ட மக்கள் குறைந்த விலையில் கோதுமை மா வழங்கப்போவதாக கூறிய அரசாங்கம், இன்று அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சாணக்கியன் ராசமாணிக்கம் உரையாற்றிக்கொண்டிருந்தபோது,புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோசங்களை எழுப்பிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து அவரை கடும் சொற்களால், சாணக்கியன் திட்டினார்.
இதன்போது, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர், நாடாளுமன்றத்துக்கு ஏற்புடைய சொற்களை பயன்படுத்தவேண்டாம் என்றும் அதனை நாடாளுமன்ற ஹன்சாட்டில் இருந்து நீக்கப்போவதாக சாணக்கியனிடம் தெரிவித்தார்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத சாணக்கியன், நாடாளுமன்ற சபையை நிர்வகிக்க தெரிந்துக்கொள்ளுமாறு, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரை அறிவுறுத்தினார்.
தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்று கூறுவதை ஏன் சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் கண்டு கொள்ளவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை சர்வதேசததினால் தடைசெய்யப்பட்ட வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ததாக பசில் ராஜபக்ச, தெரிவித்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.
விவசாயத்துறையில் ஏற்பட்ட நட்டங்களுக்காக 40 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே கூறியிருப்பது தொடர்பில் கருத்துரைத்த சாணக்கியன், இந்த பணம் நாட்டின் வரி செலுத்துவோரின் பணம் என்றும், ராஜபக்சர்களின் மெதமுலன்னையில் இருந்து எடுத்து வரப்பட்ட பணம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.