எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, இந்த நிலை ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
மருந்துக்கு தட்டுப்பாடு
அத்துடன்இதய நோய்க்கான அஸ்பிரின் மருந்தை, வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் பல அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பென்டேஜ், பஞ்சு உள்ளிட்ட பல மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கடுமையான மயக்க மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, தனியார் மருந்தகங்களில் இருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.