எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இரு இலங்கை பிரதிநிதிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த நபர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிடியாணை உத்தரவு
மிலிந்த ஹெட்டியாராய்ச்சி மற்றும் இந்திரஜித் ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பை மாசுபடுத்தியமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகளின் கீழ், கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு எதிராக கடல்சார் சூழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்தநிலையில், அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.
அதேவேளை கடந்த வருடத்தின் மத்திய பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் சரக்குகளை ஏற்றிச்சென்ற போது தீப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.