கண்டியில் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வெகு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்த குற்றச்சாட்டில் பெண் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கண்டி மாநர சபையின் நிதி திணைக்களத்தில் பணியாற்றும் பெண்ணே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்த வருமான 51 இலட்சம் ரூபாயை நகர சபையின் கணக்கில் வைப்பிலிடாது தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரின் திருமண உற்சவத்துக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நிதி திணைக்களத்தின் ஒரு பிரிவின் பிரதான முகாமைத்துவ சேவையில் கடமையாற்றும் பெண் அதிகாரியே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக்க ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டு அப் பணியாளரை பணி இடைநிறுத்தம் செய்வதற்கான பரிந்துரையை மாகாண பிரதம அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத்துக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமவன்சவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கருத்திற்கொண்டு மாநகர சபையின் கணக்குப் பிரிவில் செலுத்தப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளும் தபால் திணைக்களத்தின் ஊடாக மாநகரசபை கணக்கில் வரவு வைப்பதற்காக மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக்க தெரிவித்தார்.
இதன்படி, நகர மக்கள் மாநகர சபைக்கு செலுத்தும் வரி, குடிநீர் கட்டணம் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் தபால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி அடிப்படையில் நகராட்சி கணக்குகள் துறையினால் பெறப்படும் பணத்தை குறைக்கும் வகையில் பணி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.